சும்மா புரட்டிப் பார்த்துட்டு அப்புறமா படிச்சுக்கலாம் என்று நினைத்த புத்தகம்..
“அப்படியெல்லாம் உம்மை விட்டுர முடியாதுவே..” என்று சட்டையைப்பிடிச்சு இழுத்து உட்கார வைத்து முழுவதையும் படிக்க வைத்து அனுப்பியது.
`வெட்டாட்டம்’ நாவலை எனக்கு முன்பே படித்து முடித்த என் மனைவி, “செம நாவல் பாலா.. கண்டிப்பா படிச்சுருங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்’’ என்று என் மேஜையில் புத்தகத்தை வைத்துவிட்டு சென்றார்.
ஐந்து பக்கம் புரட்டிவிட்டு மீதியை இரவில் வாசித்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இரவு வரை காத்திருக்க முடியாமல் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இருந்த இடத்தைவிட்டு நகராமல் படித்து முடித்தேன்.
அரசியல் சதுரங்க ஆட்டம் தான் நாவலின் மைய கதை. திடீரென ஒருவனின் வாழ்கையில் அரசியல் நுழைகிறது..
பப் பார்ட்டி ஃபிஹர் என்று சுற்றிக்கொண்டிருந்த இளைஞன் புதிய களத்திற்குள் இறங்கி எப்படி விளையாடுகிறான் என்பதை படித்து முடிக்கும்போது தமிழக அரசியலின் அரை நூற்றாண்டு அரசியலை ஒரு சினிமாவாக பார்த்து முடித்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்தது போலிருந்தது.
குமுதம் ஆசிரியர்களில் ஒருவராக இருந்த மறைந்த நண்பர் கிருஷ்ணா டாவின்ஸி தெகல்கா ஊழலை அம்பலப்படுத்தி தருணை வைத்து எழுதிய, `நான்காவது எஸ்டேட்’ என்றொரு தொடர் கொடுத்த பரபரப்பை வெட்டாட்டம் நாவல் மூலம் ஷான் (Shan Karuppusamy ) கொடுத்திருக்கிறார்.
நாவலில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களையும் சம்பவங்களையும் படிக்கும்போது வாசகன் கமுக்கமாக சிரித்துக்கொள்வான்.
கருணாநிதி எம்ஜிஆர் மோதலில் ஆரம்பித்து கடைசியில் அம்மா இட்லி சாப்பிட்டது.. அப்பல்லோ மர்மம்.. டயரை கும்பிட்டவர்களுக்கு அடித்த திடீர் நாற்காலி அதிர்ஷ்டம் என தமிழக மக்கள் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை காமெடிகளையும் ஒன்றாக கலக்கி தேவையான இடங்களில் கலந்து விருந்து வைத்திருக்கிறார் எழுத்தாளர்.
( யாவரும் பதிப்பாளர் ஜீவ கரிகாலன் புழல் சிறையை பார்க்க விரும்பியே இதுபோன்ற புத்தகங்களை பதிப்பிக்கிறாரோ என்று தோன்றுகிறது. இந்த புத்தகம் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால் விரைவில் அவரை நாம் புழலில் பார்க்கலாம். இறையருள் அவருக்கு அருள் புரியட்டும். )
கூடுதலாக தகவல் தொழில்நுட்ப உலகம் எவ்வளவு அபாயகரமாக நம் ரகசியங்களை சுற்றி வளைத்திருக்கிறது என்பதையும் அந்த துறையை சார்ந்தவராக எளிமையாக வாசகனுக்கு கடத்துகிறார்.
அரசியல்வாதிகள் நின்றால் தும்மினால் சிரிச்சால்.. என்று எந்நேரமும் அரசியல்வாதிகளின் அசைவுகளுடனே குப்பைக்கொட்டும் பத்திரிகையாளனாக சொல்கிறேன்.. வெட்டாட்டம் பத்திரிகையாளர்கள் நாங்கள் எழுதியிருக்க வேண்டிய நாவல்..
வாழ்த்துகள் ஷான் கருப்புசாமி.. 🙂
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
30-10-17