அது ஒரு காலகட்டம்.. திரும்பிய பக்கமெல்லாம் போராட்டங்கள் தான்..

கருணாநிதியின் ஆதிகார ஆணவம் உச்சகட்டத்தில் இருந்தது.

ஈழம் என்ற வார்த்தை ரோட்டோர சுவரொட்டியில் தெரிந்தால் காவல்துறையினர் ஓடிச்சென்று கிழித்துவிட்டு போவார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான.. போரை நிறுத்துவதாக நடித்த நாடகங்களையெல்லாம் விமர்சித்து ஊடகங்களில் செய்திகள் வராமல் மிரட்டி உருட்டி பணிய வைத்துக்கொண்டிருந்தது கருணாநிதியின் அரசு.

அப்போதுதான்.. சவுக்கு ப்ளாக் ஸ்பாட் என்ற தளம் காவல்துறை பத்திரிகையாளர்கள் உட்பட அதிகார மையத்திலிருந்தவர்களை நெஞ்சுரத்துடன் விமர்சித்தது. யார் என்று தெரியவில்லை என்றாலும் அந்த எழுத்திலிருந்த கோபத்தை ரசித்தேன்.

பின்னர் தான் தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் சிக்கிய சங்கர் தான் அது என்று தெரிந்தது. அப்போதும் நேரில் அறிமுகம் எல்லாம் இல்லை.

ஒரு நாள் கோடம்பாக்கத்தில் நண்பர் ஒருவரது வீட்டு மொட்டை மாடியில் பிரம்மா, அருள் எழிலன், கவாஸ்கர், பாரதிதம்பி என்று பத்திரிகை நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது தான் பாரதி தமிழன், சவுக்கு சங்கரை உளவுத்துறை அதிகாரியின் தூண்டுதலில் பொய் புகாரில் போலீஸ் கைது செய்திருக்கிறது என்ற தகவலை சொன்னார்.

கேள்வி பட்டதிலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அங்கேயே ஆலோசனை நடத்தப்பட்டு பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து பெரிய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து பாரதி தமிழனிடம் சொல்ல எதிர்ப்பு கூட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தமிழ்கனல், தியாக செம்மல், ஷபீர் என்று டீம் விரிவடைந்தது. அமைப்பாக இருந்த பத்திரிகை நண்பர்கள் பலரும் ஆதரவளித்தார்கள்.

“ம்’’ என்றால் சிறைவாசம் என்று அருள் எழிலன் பிரமாதமான ஒரு குறிப்பு ஒன்றை எழுதினார். நான் கார்ட்டூன் வரைந்து கொடுத்தேன்.

தங்களுக்கு தெரிந்த முக்கியமான ஆட்களை ஒவ்வொருவரும் அழைக்க ஆரம்பித்து அந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம்.

கருணாநிதியின் அந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நடத்திய முக்கியமான எதிர்ப்பு கூட்டம் அது. உளவுத்துறையினர் சுற்றி சுற்றி வந்து அந்த கார்ட்டூன் யார் வரைஞ்சது என்று கேட்டுக்கொண்டிர்ந்தார்கள்.. என்னிடமும் கேட்டார்கள்.. தெரியலையே சார் என்று சொன்னேன். ( 😉 )

இன்றுவரை சங்கரிடம் இந்த விசயத்தை சொன்னதில்லை.

பின்னர் சங்கர் விடுவிக்கப்பட்டார். முன்னதைக் காட்டிலும் அதிகமாக எழுதி தொங்கவிட்டார். அதே சங்கர் தான் பின்னர், என்னை கார்ட்டூனுக்காக தமிழக அரசு கைது செய்தபோது பல வகையிலும் என் விடுதலைக்காக வேலை பார்த்தார்.

கருணாநிதி அரசு அவரை கைது செய்யாமல் விட்டிருந்தால்.. மேலதிகாரிகளை கண்டு நடுங்கும் ஒரு அரசு ஊழியராக பெஞ்சு தேய்ச்சுட்டு தான் இருந்துருப்பார்..

அதேப்போல் வெறுமனே பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுக்கும் ரகசிய வேலையை மட்டும் செய்யாமல்.. அவர் எழுத ஆரம்பித்தது தான் பலரையும் நடுங்க வைக்கிறது.. அவரையும் பாதுகாக்கிறது..

அந்த சவுக்கு சங்கரின் ` ஊழல் உளவு அரசியல்- ஒரு சாமாணியனின் போராட்டம்’ என்ற புத்தகத்தை நேற்று வாசித்தேன்.

முதல் பக்கத்தில் ஆரம்பித்து முடிக்கும் வரை விறுவிறுப்பு. ஒரு சாமாணியனின் போராட்டம் என்பது சரியான வரி. அப்பாவின் மறைவால் சிறுவயதிலே வேலையில் சேர்ந்தது.. மனசு பொறுக்காமல் பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தது.. அதனால் நிர்வாணப்படுத்தி அடி உதை.. சிறைவாசம்.. வழக்கு இழுபறி.. என்று ஒவ்வொன்றையும் படிக்க படிக்க ஆச்சர்யம்.. வேதனை.. கோபம் என்று பல உணர்வுகளை உண்டு பண்ணியது.

அவரைப்போல் அரசால் கைது செய்யப்பட்டவன் என்ற வகையில் இந்த புத்தகம் என்னை மிகவும் நெருக்கமாக ஆக்கியிருக்கிறது. கைதானதும் வீட்டில் இருப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று அவர் எழுதியிருப்பதெல்லாம் என் வீட்டில் நடக்கிறது.

சங்கரிடமிருக்கும் சிறப்பு என்னவென்றால்.. தவறு என்றால் தவறுதான்.. அது யாராக இருந்தாலும் சரி.. நண்பர்களாக இருந்தாலும் சரி… நாளை நான் தவறு செய்தாலும் விமர்சிப்பார்.

சவுக்கு சங்கரை நேரடியாகவோ மறைமுகமாகவோ நானும் நண்பர்களும் ஆதரிக்கிறோம்..

அதற்கு ஒரே காரணம் தான்..

உங்களாலோ என்னாலோ அவரைப்போல் அதிகாரத்திற்கு எதிராக இயங்க முடியாது.. அதனால் சவுக்கு சங்கரின் (Shankar ) இருத்தல் அவசியம் என்று நம்புகிறோம்.

நண்பர்கள் அனைவரது புத்தக அலமாரியிலும் இருக்க வேண்டிய புத்தகம் என்று பரிந்துரைக்கிறேன் .. புத்தக காட்சிக்கு போனால் தவறாமல் வாங்கி படித்துவிடுங்கள்.

வாழ்த்துகள் சவுக்கு சங்கர்.. 🙂

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *