தயங்கித் தயங்கி நுழையும் இடங்களில் என்னோடு முதல் புன்னகையைப் பகிர்ந்துகொள்பவர்களை எனக்குப் பிடித்துவிடும். டிஸ்கவரியில் நடக்கும் கூட்டங்களுக்கு பார்வையாளனாகச் செல்லும்போது அப்படித்தான் ஜீவகரிகாலனைத் தெரியும்.
பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சியின் தயக்கமான தொகுப்பாளராகவும், வரவேற்புரையிலும், நன்றியுரையிலும் மட்டுமே அவரைக் காணலாம். மேடையில் அமரும் பேச்சாளராகப் பார்ப்பது அபூர்வம். எழுத்திலும் அப்படியே இருந்தார். தன்னுடைய எழுத்தைமுன்னிலைப்படுத்தியதில்லை.
அவரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் சிறுகதைகளைத் தொகுப்பாக்குங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒருவழியாக ட்ரங்கு பெட்டிக் கதைகள் மூலம் அதை நிறைவேற்றிவிட்டார்.
நாங்கள் சந்தித்துக் கொண்டால் பேச்சு ஓவியம், சிற்பம் போன்ற கலைவடிவங்கள் பக்கம் வட்டமிடும். ஓவியத்தின் மீது இயல்பாகவே அவருக்கு ஆர்வம் இருந்தது. அதே நேரத்தில்
சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசிக் கொள்வோம். சினிமா பக்கமும் பேச்சு திரும்பும். அவருடைய தொகுப்பு அப்படியான ஒரு கலவையான உரையாடலாகவே இருக்கிறது.
ஒரு கதையில் நாட்டுக் கோழிக்கடை வைத்து விபத்துகளைக் குறைத்த நண்பனைப் பற்றிப் பேசிவிட்டு அடுத்த கதையில் ஒமேகாவின் லீனியர் வரலாறு என்று எகிறி விடுகிறார். தொகுப்பின் அட்டையில் தொடங்கி இறுதி வரை ஓவியங்கள் நம் கூடவே பயணிக்கின்றன. கதைகளுக்கான ஓவிய வடிவில் மட்டுமல்ல, கதைகள் வடிவிலும். ஓவியர் திரு.நரேந்திரபாபு இந்தத் தொகுப்பிற்கான நியாயத்தை செய்திருக்கிறார்.
என்னுடைய பார்வையில் அவருடைய பன்னிரண்டு கதைகளிலும் அவர் சொற்களின் வாயிலாக ஓவியங்களைத் தீட்ட முயற்சிப்பதாகவே பட்டது. சில ரவிவர்மாபோல நேரடியானவை. சில ஓவியங்கள் சற்று அப்ஸ்ட்ராக்ட் எனப்படும் மறைபொருள் கொண்டவை. அவற்றை சற்று நின்று கவனிக்க வேண்டியிருக்கிறது. சில இடங்களில் புரியாமலும் கடக்க வேண்டியிருக்கிறது.
ஒரு மூதாதையரின் டிரங்குப் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒரே மாதிரியான பொருட்கள் இருக்காது. யாருடைய பெட்டி என்பதைப் பொருத்து சேமிப்புக்குத் தகுதியானதென்று நினைப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மாறிக் கொண்டேஇருக்கிறது.
காகிதங்கள், உடைகள், சான்றிதழ்கள், பரிசுகள், துருப்பிடித்த ஆணிகள், நகைகள் என்று எத்தனையோ இருக்கலாம். அவை எல்லாம் பொருட்கள் என்று பார்த்தால் வித்தியாசமாகத்த்தான் தெரியும். ஆனால் அவை நினைவுகள்.
நாம் சில பொருட்களை பொருட்களுக்காகவா சேகரிக்கிறோம்? நினைவுகளுக்காக அல்லவா? ஜீவகரிகாலனின் டிரங்குப் பெட்டி அப்படித்தான் சிறப்புப் பெறுகிறது.
தொடுதல் கதை ஒரு எளிமையான இரவுப் பேருந்துப் பயணத்தின் விவரணை என்றாலும் அதன் இறுதிச்சொல் வாசகனை அசைத்துவிடும். இரண்டு கதைகளில் இறந்தவர்கள் என்று நினைத்தவர்கள் உயிர்த்தெழுகிறார்கள். உயிருடன் இருப்பவர்கள் என்று நினைத்தவர்கள் இறந்திருக்கிறார்கள். கொஞ்சம் டேஜாவூ மாதிரி இருந்தது.
ஆனால் படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை ஒற்றைப் படைப்போடு நிறுத்துவதில்லை. வாழ்க்கையில் ஒரு வித அமானுஷ்யத்தை ஜீவகரிகாலன் விரும்புகிறார். பல கதைகளில்
காலத்தை முன்பின்னாக மாற்றிப் போடுகிறார். இடங்களை மாற்றி நிகழ்வுகளை நடத்துகிறார்.
இந்தத் தொகுப்பு குறித்த விமர்சனமாக ஒன்றை முன்வைக்கலாம். தொடுதல், தூத்துக்குடி கேசரி, 2 சி பஸ் ரூட் போன்ற கதைகள் எளிமையான நடையில் நேரடியாக இருப்பவை. தீவிர இலக்கிய வாசகர்கள் இவற்றை டாராகக் கிழித்து விடுவார்கள். அவர்களுக்கு மஞ்சள் பூ, ஒமேகா, காட்சி போன்ற கதைகள் சிலாகிக்கத் தக்கவையாக இருக்கும்.
இப்படிக்கலவையான ஒரு தொகுப்பைக் கொடுப்பதில் இருக்கும் ஒரே ஆபத்து இரண்டு வாசகர்களையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதுதான். அதன் இன்னொருவாதம் இரண்டு பேரையும் திருப்திப்படுத்த முடியும் என்பது.
ஆனால் என்னால் இரண்டு வகையான கதைகளோடும் பயணிக்க முடிந்தது. அதற்குக் காரணம் ஜீவகரிகாலன் என்ற மனிதனை நான் முன்பே அறிவேன் என்பதால் அவருடைய பயணத்தைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அதே நேரம் புதிய வாசகர்களின் மனநிலை எப்படியென்பதை அவர் கேட்டு
அறிந்துகொள்வது அவரது அடுத்த கட்டப் பயணத்துக்கு அவசியமான ஒன்று. யாருக்காகப்பயணக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் பயணம் இலகுவாகிவிடுகிறது.
– ஷான்
– shan.mugavari@gmail.com