நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்..

`ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை ஏதேனும் கடையில் பார்த்தாலோ.. அல்லது பழைய புத்தக கடையில் கிடந்தாலோ கூட ஒரு நொடி கூட தாமதிக்காமல் வாங்கி விடுங்கள்.

ஏனெனில் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம் அது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அந்த பலியை தமிழினத்தின் மீது போட்டு பெரும் இனப்படுகொலையை செய்து முடித்ததற்கு பின் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறது.

அந்த படுகொலை செய்த சூத்திரதாரி யார்.. என்ன பின்புலம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் பத்திரிகையாளர் ஏகலைவன் எழுத்தில் உருவான இந்த புத்தகத்தை படித்தே ஆக வேண்டும். (கூடவே நளினி பிரியங்கா சந்திப்பு புத்தகத்தையும் படித்துவிடுங்கள்..)

ஒருநாள் இரவு பதினொரு மணிக்கு இந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.. அதிகாலை மூன்று மணி வரை கடைசி பக்கத்தை படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.. ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. நாம் ஒரு பார்வையாளனாக அந்த இடத்தில் நிற்பதுபோல் எழுத்துநடை நம்மை கட்டிப்போடுகிறது.

வேலுசாமி அவர்களின் துணிச்சல் நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது. நாம காமெடி பீஸாக நினைக்கும் சு.சாமி எப்படிப்பட்ட சதிகாரர்.. என்பதை அந்த காலகட்டத்திலே அம்பலப்படுத்தி கூட்டம் போட்டு பேசியிருக்கிறார்.

அவர் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் பதவி சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் விலை போயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் விட உயிர் பயம்.. ஏனெனில் அவர் கை வைத்த இடம் அப்படிப்பட்டது.

இப்போதும் அவருக்கு வருத்தம் என்னவென்றால்.. சதிகாரர்கள் வெளியில் இருக்க, கால் நூற்றாண்டை கடந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் விடுதலையாக முடியவில்லையே என்பதுதான்..

வேலுசாமி அவர்களுடன் ஏற்கனவே அறிமுகம் உண்டு.. அப்போதெல்லாம் அவரை ஒரு காங்கிரஸ்காரராக மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன்.

ஆனால் இந்த புத்தகத்தை படித்து முடித்தப்பிறகு அவர் மீது பெரும் மரியாதை வந்துவிட்டது. தமிழர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய.. கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான நபர் வேலுசாமி.

-கார்ட்டூனிஸ்ட் பாலா
www.linesmedia.in
27-7-17

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *