ஏதாவது ஒரு சில புத்தகங்கள் தான் படித்தவுடனே அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உற்சாகத்தை கொடுக்கும். ..

அப்படியான ஒரு புத்தகம் தான்
Vaa Manikandan எழுதிய `லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்’.

இணையத்தை பயன்படுத்தும் எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் வா.மணிகண்டன். இணையத்தில் எழுதுவதை எளக்காரமாக கருதிய `டப்பா டக்கர்’ எழுத்தாளர்களுக்கு மத்தியில் வா.மணிகண்டன் இணையத்தை அற்புதமாக கையாள்கிறார்.

ஃபேஸ்புக்கில் தான் அவரது பதிவுகளை படிப்பேன். ஒரு பாரா மட்டும் தான் முன்னோட்டமாக போடுவார்.. மேற்கொண்டு படிக்க அவரது இணையதள லிங்கை க்ளிக் செய்தாக வேண்டும். அதற்குள் நுழைந்தால் அந்த எழுத்து நடை அப்படியே உங்களை கட்டிப்போடும்.. அட்டகாசமான எழுத்து நடை.

ஒவ்வொரு கதையும் நீட்டி முழக்கணும் என்றெல்லாம் இல்லாமல் மூன்று பக்கத்திற்குள் சாதாரணமாக உரையாடும் கதை சொல்லும் யுக்தி அவரது எழுத்தில் இருக்கிறது.

இந்த புத்தகத்தில் 25 கதைகள் இருக்கின்றன. அத்தனையும் உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். கதைகளை படித்ததிலிருந்து, என்னைப் போல் மணிகண்டனும் என்பதுகளையொட்டி பிறந்தவராக இருக்க கூடும் என தோன்றுகிறது. பல கதைகள் என் அனுபவத்தோடு இணைகிறது. முக்கியமாக பிட்டுப்பட அனுபவங்கள்.  பல கதைகளில் லைட்டா காமம் குறும்புத்தனமாக எட்டிப்பார்க்கிறது

`நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது’ என்ற கதை இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. சக்கிலிப் பையன் கதை சமூக அவலத்தை முகத்தில் அறைகிறது.

சாவதும் ஒரு கலை, , துலுக்கன், நீலப்படம், சூனியக்காரனின் முதலிரவு, சில்க் ஸ்மிதா என எல்லா கதைகளும் அட்டகாசம்.

புத்தகத்தின் அட்டையில் வாயெல்லாம் பல்லாக இருக்கும் சிறுவனைப்போல் இந்த மின்மினிக் கதைகளை படித்ததும் நீங்களும் உற்சாகமாக சிரிப்பீர்கள் என்பதற்கு நான் உறுதி.

வா.மணிகண்டனுக்கு எழுத்துலகில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துகள்.

-கார்ட்டூனிஸ்ட் பாலா
21-8-14
————————–—————
புத்தகம் வாங்க:
09663303156

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *