`வீட்டின் வரவேற்பறையில் அம்மா அமர்ந்திருக்க, உள்ளறையில் வைத்து ஒருநான்குபேர்    உங்களை நிர்வாணமாக நிற்க வைத்து அடித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் 

“அப்படியே வெளியே கூட்டிட்டு போவோம்” என்று சொல்கிறார்கள்.. எப்படியிருக்கும் உங்களுக்கு..’’

வாழ்க்கையில் அப்படி உச்சபட்ச அவமானத்தை சந்தித்தப்பிறகு பயம் போய்விடும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சவுக்கு.

உலகம் முழுக்க அதிர்வலைகளை உண்டு பண்ணிய விக்கி லீக்ஸ் போல், தமிழக அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும்.. ஊடகத்துறை வட்டாரத்திலும், நீதித்துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணிய பெயர் சவுக்கு.

ஒரு அதிகாலைப்பொழுதில் மரங்கள் அடர்ந்த பூங்கா ஒன்றில் அந்த சவுக்கை சுழற்றுபவருடன் நடந்த ரகசிய உரையாடலை www.linesmedia.in வாசக நண்பர்களுக்காக `லீக்’ செய்கிறோம்.

ஒரு உளவாளியிடம் கேட்ககூடாத கேள்வி.. உங்களைப்பற்றி சொல்ல முடியுமா..?

லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றிய என் அப்பா ஆச்சிமுத்து. அம்மா ஒரு சகோதரி என்று அன்பான குடும்பம் என்னுடையது. ஆரம்ப படிப்பு தஞ்சையிலும் திருச்சியிலும் கழிந்தது.பின்னர் சென்னை வந்தோம். சென்னை, புரசைவாக்கம் முத்தையா செட்டியார் அரசுப்பள்ளியில் படித்தேன்.

எதிர்பாராத அப்பாவின் மரணத்தால், அவர் பணிபுரிந்த துறையிலே வேலை கிடைத்தது. மாதமானால் சம்பளம்.. அம்மா சகோதரி.. நண்பர்கள் என்று ஒரு வழக்கமான அரசு ஊழியனைப்போன்று யார் வம்புதும்புக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.

எப்படி வாழ்க்கை மாறியது?

நான் பணிபுரிந்த பிரிவு காவல்துறையில் முக்கியமானது. அதிகாரிகள் பின்னாடியே சுற்றும் பணி என்பதால் மேல் மட்டத்தில் நடக்கும் தகிடுத்தத்தங்கள் எல்லாம் எனக்கு தெரியும்.

ஆனால் அதை வெளியில் சொன்னால் வேலைக்கு பிரச்னை வருமே என்று பயப்படக்கூடிய ஒரு சாதாரண அரசு ஊழியனின் மனநிலையில்தான் அப்போது இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் மனசாட்சி அதை தகர்த்தெறிந்தது. பத்திரிகை நண்பர்களுடன் தொடர்பு கிடைத்தது.

அப்போது திமுக ஆட்சி. அமைச்சர் பூங்கோதை காவல்துறை உயர் அதிகாரியுடன் தொலைப்பேசியில் பேசும் உரையாடல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.

ஒருநாள் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிபி சிஐடிபோலீசார் வந்து என்னை கைது செய்தனர்.       சோதனை செய்வதற்காக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.   நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதாக நினைத்து அம்மா வரவேற்பரையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் உள்ளே வந்தவர்கள், `டேப் வெளியானது எப்படி என்று உண்மையைச் சொல்லச்சொல்லி என்னை நிர்வாணமாக நிற்க வைத்து மிருகத்தனமாக அடித்தார்கள். இரண்டு கால்களையும் நேராக விரித்து இரண்டு தொடையிலும் ஏறி நின்றார்கள்
. உண்மையை சொல்லாவிட்டால், இப்படியே ரோட்டில் இழுத்து செல்வோம் என்று மிரட்டினார்கள். என்கவுண்டரில் போட்டுத்தள்ளி விடுவோம் என்றார்கள்.

அந்த நொடி வலியெல்லாம் வைராக்கியமானது. கடைசிவரை வாயைத் திறக்கவே இல்லை.

அதே துறை சார்ந்தவன் என்பதால் அடிக்காமல் கொஞ்சம் கருணையாக நடந்து கொள்வார்கள் என்று அப்பாவியாக நம்பி கொண்டிருந்தேன். ஆனால் வாங்கிய அடி ஒவ்வொன்றும் மறக்க முடியாதது.

இன்றைய சவுக்கின் அடையாளமான மரணம் குறித்த பயமற்ற எழுத்துக்கெல்லாம் மூலகாரணம் அன்று என்னை அடித்த காவலர்கள்தான். அவர்களுக்கு நன்றி.


வீட்டில்
 அம்மாவும் சகோதரியும் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

காலை எழுந்ததும் வேலை.. வேலை விட்டால் வீடு என்று இருந்தவன் வாழ்க்கை மாறிப்போனது அந்த வழக்கால். உடன் பணிபுரிந்த நண்பர்கள் விலகி சென்றுவிட்டார்கள்.  அத்துடன் நாங்கள் இருந்த அப்பார்ட்மெண்டிலும் எல்லோருக்கும் என்னைப்பற்றி தெரிந்துபோனது. எங்களைக்கண்டால் முகத்தை திருப்பிக்கொள்வார்கள். ஒரு ஆணாக எனக்கு அது பிரச்னை இல்லை.

ஆனால் அம்மாவுக்கும் சகோதரிக்கும் அது சிறு மன உளைச்சல்தான். அதன்பிறகு நள்ளிரவிலும் போலீசார் விசாரணைக்கு வருவது சகஜமாகிவிட்டது. ஆனால் இன்றைய நாள் வரை.. `ஒருநாள் கூட நான் தப்பு செய்துவிட்டதாக அம்மாவோ சகோதரியோ குற்றம் சாட்டியதில்லை’. அது என் மனசாட்சிக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்தது.

காவல்துறை பணியில் இருந்தவர் நீங்கள்.. எழுத்து எப்படி பழக்கமானது?

என் வழக்கை எந்த கட்டணமும் இல்லாமல் நடத்தி வெளியில் கொண்டுவந்தவர்கள் ராதாகிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட வழக்கறிஞர் நண்பர்கள்தான்.

வேலையில்லாமல் வீட்டில் இருக்க பிடிக்காமல் வழக்கறிஞர்களுக்கு உதவியாக அவர்களுக்கு என்னால் முடிந்த வேலைகளை செய்து வந்தேன்.

அப்போதுதான் blog என்ற ஒன்றை நண்பர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஈழப்போரும் அப்போது உச்சத்தை எட்டியிருந்தது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அதனால் கொஞ்சம் எழுதும் ஆர்வமும் இருந்தது. அப்போது என் கோபத்திற்கு வடிகாலாக இருந்தது அந்த blog எழுத்துதான். ஊடகங்கள் எல்லாம் கருணாநிதியின் மிரட்டலுக்கு அடிபணிந்திருந்தன.

அப்போது அதிகாரத்திலிருந்த காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் இணைந்து எப்படி திருட்டுதனம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து எழுதினேன். அப்போது சகல அதிகாரத்தையும் கையில் வைத்திருந்த ஜாபர் சேட் குறித்து என்னிடமிருந்த ஆதாரங்களை வைத்து ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திற்கும் சென்று பேசினேன்.

கருணாநிதியைப் பற்றிக்கூட எழுதலாம்.. ஆனால் அந்த அதிகாரியைப் பற்றி எதுவும் எழுத முடியாது என்று எல்லா பத்திரிகைகளும் சொல்லி வைத்ததுபோல் சொல்லவே வேறு வழியின்றி நானே அதை வெளியிட்டேன்.

மறுநாளே சாலையில் யாரிடமோ தகராறு செய்தேன் என்று பொய்வழக்கு போட்டு கைது செய்தார்கள். ஆனால் அது வலைதளத்திலும் பத்திரிகையாளர்கள் மட்டத்திலும் எதிர்ப்பை உண்டு பண்ணி எனக்கான ஆதரவு குரலாக மாறியது.

அதுவரை தனிநபராக அடையாளம் காணப்பட்ட சவுக்கு அதன்பின்னர் ஒரு மறைமுக நெட்வொர்க்காக மாறியது. பல இடங்களிலிருந்தும் ஆதாரங்கள் வந்து குவிய ஆரம்பித்தன.

2ஜி கனிமொழி உள்ளிட்டோரின் உரையாடலை வெளியிட்ட அனுபவத்தை சொல்லுங்கள்.. அது எப்படி கிடைத்தது..?

யோசித்துப்பார்த்தால் அது காமெடியாக இருக்கும். ஏனெனில் ஊர் உலகத்தில் இருக்கும் அத்தனைபேரின் தொலைப்பேசியையும் ஒட்டுக்கேட்பதாக சொல்லப்பட்டவரின் உரையாடலே லீக் ஆனது என்பதுதான் அந்த காமெடி.

அந்த உரையாடல் எப்படி அவரது செல்போனில் இருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த உரையாடல் என் கைக்கு வந்ததும், அதை தடுக்க திமுகவின் மேல்மட்டத்தினர் பல வகையில் முயன்றார்கள். “அதை வெளியிடுவதால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடும்.. நாம பார்த்து பேசிக்கலாம்” என்று வலை விரித்தெல்லாம் பார்த்தார்கள்.

நான் வெளியிடுவதில் உறுதியாக இருந்தேன் என்றதும் என்னை பெண் செய்தி வாசிப்பாளர் பற்றி எழுதிய வழக்கில் கைது செய்ய முயற்சி செய்தார்கள்.

விமான நிலையத்தில் என்னை கைது செய்ய காவல்துறை தயாராக இருந்தது. அதனால் நண்பரின் காரிலே பக்கத்து மாநிலம் வரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று பிரசாந்த் பூசனிடம் ஆதாரங்களை கொடுத்து வெளியிட்டேன். அது சவுக்கு செய்த பணிகளில் முக்கியமானது என்பேன்.

உங்கள் மீது கடும் விமர்சனம் ஏற்பட காரணமான பெண் செய்தி வாசிப்பாளர் பற்றி எழுதியது குறித்து இப்போதைய உங்களின் மனநிலை என்ன..?

உண்மையை சொல்லவேண்டுமானால் நான் இப்போது அப்படி எழுதியதற்காக வருத்தப்படுகிறேன்.

அதோடு நான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளன் இல்லை.. என்பதால் அந்த கணம் என் மனதிற்கு சரி எனப்பட்டதை எழுதிவிடும் ஒரு கோபக்காரனாக அப்போது இருந்ததால் அப்படி எழுதிவிட்டேன்.

கோபத்தில் எழுதியதால் வார்த்தைகளில் சிறிது கவனக்குறைவாக இருந்துவிட்டேன். காலம் சில பக்குவங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. இனி அதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன்.

உங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்து நீங்கள் மிரட்டி பணம் பறிக்கிறீர்களா..?

நிச்சயமாக இல்லை. எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக சிலர் அப்படி கிளப்பிவிடுகிறார்கள்.

அப்படி ஒரு கேவலமான செயலை செய்ய மாட்டேன். பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்றால் இப்படி தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை தேர்வு செய்திருக்க மாட்டேன்.

சஸ்பெண்ட் ஆனாலும்  பணியிலிருந்து அரை சம்பளம் வருகிறது. அதை வைத்துதான் என் வாழ்க்கையை ஓட்டுகிறேன். என்னுடைய இணையத்தை நடத்துவது உள்ளிட்ட செலவுகளுக்கு அதுபோதுமானதாக இருக்கிறது. சவுக்கு மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை.

சவுக்கு பணியின் மூலம் இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா.. உங்கள் நோக்கம் தான் என்ன?

பெரிய மாற்றம் வருமா.. இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு பயணியாக என் வாழ்க்கை பயணத்தில் சில பதிவுகளை செய்ய விரும்புகிறேன். நான் இப்படி இருப்பதால் மற்றவர்களும் அப்படி என்னைப்போல் மாற வேண்டும் என்ற அவசியமில்லை. யாரையும் குறை சொல்ல மாட்டேன். என் வாழ்க்கை பயணம் இதுவென்று நான் தேர்ந்து எடுத்திருக்கிறேன். கஷ்டமோ நஷ்டமோ.. அதை நான் விரும்பி செய்கிறேன்.

2009ல் சவுக்கு தொடங்கப்பட்ட காலத்தில், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களில் நேரடியாக விமர்சனம் செய்ய ஒரு வகையான அச்சம் இருந்தது.   அதுவே அப்படியென்றால் நீதித்துறை பற்றி சொல்லவே வேண்டாம்.

ஆனால், சவுக்கு தளத்தில் வரும் கட்டுரைகளுக்கு பிறகு, இவர்கள் மீதான விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பரவலாக அதிகரித்து காணப்படுவதை காண முடிகிறது.

குறிப்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கணக்குப் பிழையோடு ஜெயலலிதாவை விடுவித்தற்கு பிறகு, அவர் மீது நேரடியான விமர்சனங்கள் வந்தது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு தருணம்.   இது போல நம்மால் இயன்றவரை, சிறு மாற்றங்களையாவது செய்ய முடிகிறதே என்ற மகிழ்ச்சி உண்டு.

கருணாநிதிஜெயலலிதா பற்றி?

ஒரு ஆட்சியாளர் என்பவர் எளிதில் அனுகக்கூடியவராக இருக்க வேண்டும். கருணாநிதி மீது ஊழல், ஈழத்துரோகம் என பல விமர்சனங்கள் இருந்தாலும் ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகையில் நல்ல நிர்வாகி என்பேன்.  எளிதில் அணுகக் கூடியவர்.  ஒரு பிரச்சினையை விவாதித்து முடிவெடுக்கக் கூடியவர்.   எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உத்தரவுகள் பிறப்பிப்பவர் அல்ல.

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியலில் ஜெயலலிதாவின் வளர்ச்சி என்பது கண்டிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.  எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும், தன்னை அரசியலில் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்தார்.

ஆனால் ஜெயாவை அவரது அமைச்சரவை சகாக்களே சந்திக்க முடியாதளவுக்கு தன்னை சுற்றி ஒரு இரும்புக் கோட்டையை வைத்திருந்தவர். அது ஒரு நிர்வாகிக்கு அழகல்ல. ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. அவரது மரணம் என்பது மர்மமானதுதான். நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த மரணத்தில் அப்பல்லோவின் பங்கு என்ன என்பது குறித்து எங்களுக்கு ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை.. காத்திருக்கிறோம்.

இப்போது செயல் தலைவர் வந்துவிட்டார்.. சசி சின்னம்மாவாகி சிறைக்கும் சென்றுவிட்டார்இன்றைய தமிழக அரசியல் சூழல் எப்படி போய் முடியும் என்று கருதுகிறீர்கள்..?

கருணாநிதியிடமிருந்து கட்சி முழுவதுமாக ஸ்டாலின் வசம் வந்துவிட்டது.   கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்று இருந்த தமிழக அரசியல் இன்று, சசி எதிர்ப்பு சசி ஆதரவு என்று    மாறி விட்டது.

இந்த சூழலில் தேர்தல் வந்தால் ஸ்டாலின் தலைமையிலான திமுக மிகப்பெரும் வெற்றியை பெரும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஆறுமாதம் தாங்கினாலே ஆச்சர்யம்தான். சசிகலா கதை அவ்வளவுதான்.

இன்றைய ஊடக சூழல் பற்றி?

எல்லா ஊடகங்களும் அதிகாரத்திற்கு முன் மண்டியிட்டு காட்சியளிக்கின்றன. விற்பனை என்பதெல்லாம் குறைந்துப்போய்விட்ட நிலையில் அரசு விளம்பரங்களை நம்பியே அவைகள் காலம் தள்ளுகின்றன. இன்றைக்கு மக்களுக்கு சமூக ஊடகங்கள் மட்டுமே நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றது.

உங்கள் வாழ்க்கையை திருப்பிப்போட்ட தொலைபேசி உரையாடல் வெளியான வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டீர்கள்வாழ்த்துகள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்..?

பெரிய நிம்மதியாக இருக்கிறது. போலீஸ் அடி வழக்கு எனபதெல்லாம் எனக்கு பெரிய சிரமத்தை கொடுக்கவில்லை. ஆனால் 2008-ல் இருந்து இந்த வழக்குக்கிற்காக நீதிமன்றத்திற்கு அலைந்தது என்பது மிகப்பெரும் சலிப்பை கொடுத்தது என்பது உண்மை. அந்த அனுபவங்களையே ஒரு புத்தகமாக போடலாம்.

காவல்துறையைச் சேர்ந்தவர்.. பத்திரிகையாளர்.. இப்போது சவுக்கு யார்?

நிச்சயமாக பத்திரிகையாளர்தான்.

இனிமேல் நான் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கும் போக முடியாது. புலி வால் பிடித்த கதைதான். நான் பணிபுரிந்தது லஞ்ச ஒழிப்புதுறையில் மிகவும் ரகசியமானது.

வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டாலும் கூட

எனக்கு இப்போது இருக்கும் பத்திரிகையாளர்கள் நெட்வொர்க்கை தெறிந்து கொண்டவர்கள் மீண்டும் என்னை அந்த பணியில் சேர்க்க மாட்டார்கள்.

சவுக்கு என்பது ஒரு தனிநபர் அல்ல.. அது ஒரு இயக்கம்.. அநீதிகளை கண்டுகொதிக்கும் தனிநபர்களின் கூட்டு மனசாட்சியே சவுக்கு.

ஒரு அரசு ஊழியனாக தானும் தன் குடும்பமும் என்று இருந்ததைவிட இப்போது சவுக்கு மூலம் செய்யும் பணியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. என்று சொல்லும்போது  சவுக்கின் முகம் புன்னகைக்கிறது.

அதிகாரத்திற்கு எதிராக தொடரட்டும் சவுக்கின் சுழற்றல்!

-கார்ட்டூனிஸ்ட் பாலா

25-2-17

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *