ஒருநாள் மனச்சோர்வாக இருந்தது.. மனநிலையை மாற்ற ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று அலமாரிக்குள் கையை விட்டபோது சிக்கியது ரோலக்ஸ் வாட்ச் நாவல்.
மனசார சொல்கிறேன்.. மிக சமீபத்தில் இவ்வளவு பரபரப்பாக ஒரு புத்தகம் வாசித்ததில்லை. இரவு 11 மணிக்கு வாசிக்க எடுத்தவன் அதிகாலை நான்கு மணிக்கு புத்தகத்தை முடித்தப்பின்புதான் தூங்கினேன்.
எளிய மனிதர்கள்.. விழிம்புநிலை மனிதர்கள்.. என்றெல்லாம் நாம் பேசிக்கிட்டு இருக்கும் இதே இடத்தில் வெள்ளை மனிதர்களின் கொண்டாட்டமான கருப்பு உலகத்திற்குள் நம்மை கூட்டிச்செல்கிறார் எழுத்தாளர் சரவணச்சந்திரன்.
பேஸ்புக்கில் யார் வம்பு தும்புக்கும் போகாதமாதிரியே எழுதும் அவரது எழுத்துக்களை வைத்துதான் அறிமுகம். சக பத்திரிகைத்துறை சார்ந்தவர் எனபதைத்தவிர அவரைப்பற்றி பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. சந்தித்தது கூட இல்லை.
பொதுவாக ஒரு புத்தகம் போட்டு எழுத்தாளன் ஆகிவிட்டால் இலக்கிய உலகில் நடக்கும் அக்கப்போர்களில் எப்படியாவது சிக்க வைத்துவிடுவார்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.. அதுவாகவே நடக்கும். ஆனால் சரவணச்சந்திரன் நான்கு புத்தகங்கள் எழுதியும் இன்னும் எந்த குழு அரசியலிலும் சிக்காமல் இலக்கை நோக்கி சரியாக படியேறிக்கொண்டிருக்கிறார்.
இதை குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. ரோலக்ஸ் வாட்ச் நாவலில் வரும் கதாநாயகன் கதாப்பாத்திரம் அப்படியே சரவணச்சந்திரனை கண் முன் கொண்டு வருகிறது.
பெப்ஸி குடிப்பதற்காக வெளிநாட்டுக்கு பறக்கும் பணக்கொழுப்பெடுத்த உலகின்.. டீலிங்.. உலகின் அத்தனையையும் நம் கண் முன் காட்சியாக விரிய வைக்கிறார். அதுதான் ஒரு எழுத்தாளனின் வெற்றி.
திடீர் தொழிலதிபர்.. திடீர் சினிமா ஃபைனான்ஸியர்.. திடீர் எம்.எல்.ஏ.. பல கேரக்டர்களை பார்த்திருக்கிறேன்.. மண்டையில் சரக்கு எதுவும் இருக்காது.. ஆனால் செழிப்பாக இருப்பார்கள்.. அது எப்படி என்பதற்கான பதில் இந்நாவலில் இருக்கிறது.
முன் நவீனத்துவமோ.. கடைசி.. நடு செண்டர் நவீனத்துவமோ.. வாசகனை வாசிக்க வைக்கும் எழுத்துதான் வெற்றி. ரோலக்ஸ் வாட்ச் நாவல் வாசிப்பனுபவம் கொடுத்த நம்பிக்கை அவரது மற்ற புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
ஏதேதோ இஸங்கள் பேசி முதல் இரண்டு வரிகளில் வாசகனை.. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்.. என்று தூங்க வைக்கும் எழுத்தாளர்களுக்கு நடுவில் சரவணச்சந்திரன் எழுத்துநடை சுவாரஸ்யமானது.
அதிலும் மாருதி ஸ்வீப்ட்டின் பின்புறம் குறித்து ஒரு கண்டுபிடிப்பு வருகிறது.. யார் சார் அந்த திவ்யா என்று நமக்கே பார்க்க வேண்டும் போல் தூண்டிவிடுகிறார்..
அது என்ன மாருதி ஸ்விப்ட் கதை என்பதை ரோலக்ஸ் வாட்ச் நாவலை வாசித்து ருசிக்கவும்..
வாழ்த்துகள் சரவணச்சந்திரன்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா
www.linesmedia.in
16-5-17